பாகிஸ்தானில் இருந்து 2 மாதங்களில் 60 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாகவும், அவர்கள் விழாக்காலத்தில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்கியதில் இருந்து தீவிரவாத இயக்கங்கள் இந்தியா மீது கடும் சீற்றத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்துக் காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி வழியே கடந்த 2 மாதங்களில் மட்டும் 60 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
நவராத்திரி, தீபாவளி எனத் தொடர்ந்து விழாக்கள் வரும் நிலையில் தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. உளவுத்துறையின் எச்சரிக்கையால் எல்லைப்பகுதிகளிலும் நாட்டின் பெருநகரங்களில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.