இதுவரை இந்தியாவிற்கு வருகை தந்த 6 அமெரிக்க அதிபர்கள் ….

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வர உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிப்ரவரி 24, 25 ஆகிய இருநாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வர உள்ளார். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அவருடன் அணிவகுத்துச் செல்லக்கூடிய பாதுகாப்பு வாகனங்கள் அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் பிப்ரவரி 18ஆம் தேதி அகமதாபாத் வந்தடைந்துள்ளன. தனது மனைவி மெலானியாவுடன் இந்தியா வருகிற ட்ரம்ப், சபர்மதி ஆசிரமத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தியபின், அகமதாபாத்தின் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான சர்தார் வல்லபபாய் படேல் மைதானத்தைத் திறந்து வைக்கிறார்.


   
இதுவரை அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்கள் ஏழு முறை அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளனர். அதில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போதும், நரேந்திர மோடி பிரதமராக இருந்தபோதும் அதிபர் பராக் ஒபாமா மட்டுமே இரண்டு முறை இந்தியாவுக்கு வந்துள்ளார். டிரம்ப் இந்தியா வரும் ஆறாவது அமெரிக்க அதிபர் ஆவார்.

அமெரிக்காவின் 34-வது அதிபராக இருந்த டுவைட் டி. ஐசனாவர்தான் இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஆவார். அவர் 1959-ம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்தார். அப்போது அவர் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு மற்றும் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் ஆகியோரைச் சந்தித்தார். அதன்பின் 10 ஆண்டுகள் கழித்து 1969-ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகைபுரிந்து, அன்ரைய பிரதமர் இந்திரா காந்தி மற்றும் ஜனாதிபதி முகமது ஹிதயதுல்லா ஆகியோரைச் சந்தித்தார்.

1978-ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் இந்தியா வந்தார். 2000-ல் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் இந்தியா வந்தார். அவருக்கு யானை சவாரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதும், யானை என்பது அவரது எதிர்க் கட்சியின் சின்னம் என்பதால் அவர் சவாரி செய்யவில்லை. பின்னர் அதிபர் பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் அவர் இந்தியா வந்தபோது யானை சவாரி மேற்கொண்டார்.

இதன் பின்னர், ஆறு ஆண்டுகள் கழித்து, 2006-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் இந்தியாவுக்கு வந்து, அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தார். அதன் பிறகு 2010ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா முதன்முறையாக இந்தியா வந்தார்.

பின்னர் நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக முதன்முறையாக பதவியேற்ற பின்னர்,  கடந்த 2015ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா இரண்டாவது முறையாக இந்தியாவிற்கு வருகை புரிந்தார். தற்போது மீண்டும் மோடியின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதன்முறையாக இந்தியா வர உள்ளார். இதனால் ட்ரம்ப் இந்தியாவிற்கு வரும் ஆறாவது அமெரிக்க அதிபர் என்ற சிறப்பைப் பெறுகிறார்.

Exit mobile version