கடையநல்லூர் தனியார் பார்மசி கல்லூரியின் தாளாளருக்கு 6 மாத சிறைத் தண்டனை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

அங்கீகாரம் பெறாத படிப்புகளில் பயின்ற மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கத் தவறிய கடையநல்லூர் தனியார் பார்மசி கல்லூரியின் தாளாளருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இயங்கி வரும் தனியார் பார்மசி கல்லூரியில் 2014ம் ஆண்டு பி.பார்ம் சேர்ந்த மாணவர்கள் நான்கு ஆண்டு படிப்பு முடிந்தும் தங்களை பல்கலைக்கழக தேர்வு எழுத அனுமதிக்காததால் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அங்கீகாரம் பெறாத படிப்புகளில் சேர்க்கப்பட்டதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே 4 மாணவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், மேலும் 3 மாணவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் இழப்பீட்டு தொகையாக 2019 ஏப்ரம் 10ம் தேதிக்குள் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை நிறைவேற்றாததால், கல்லூரி தாளாளர் மற்றும் கல்லூரி முதல்வர் மீது நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர் பி.ஜே.ஸ்ரீகுட்டி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கல்லூரி தாளாளர் முகைதீன் பாஷாவுக்கு 6 மாத சாதாரண சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Exit mobile version