காலியாகும் அமமுக கூடாரம் ; அதிமுகவில் இணையும் முக்கிய நிர்வாகிகள்

சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததை அடுத்து தமிழகத்தில் அமமுக-வின் கூடாரம் காலியாகி வருகிறது.

அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக-வில் இணைந்து வருகின்றனர்.

 

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட அமமுக படுதோல்வியை சந்தித்தது.

அமமுக சார்பில் போட்டியிட்டவர்கள் மட்டுமல்லாது அக்கட்சியின் பொதுச்செயலாளரான டிடிவி தினகரனை கூட தமிழக மக்கள் அங்கீகரிக்கவில்லை.

தேர்தலின் ஏற்பட்ட படுதோல்லி அக்கட்சியை ஆட்டம்காண வைத்துள்ளது.

தமிழக மக்களிடம் செல்வாக்கு இல்லை என்பது உறுதியான நிலையில், தேர்தலுக்கு பின் சத்தம் இல்லாமல் இருக்கும் அமமுக-வில் இருந்தால் அரசியல் எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்து அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அமமுகவின் மத்திய சென்னை மாவட்ட செயலாளராக இருந்த கிருஷ்ணன், வட சென்னை மத்திய மாவட்ட செயலாளராக இருந்த லட்சுமி நாராயணன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த பொன் ராஜா ஆகியோர், சேலம் மாவட்டத்திற்கு சென்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

தொடர்ந்து அமமுகவில் இருந்து விலகி வரும் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

அதன்படி மத்திய சென்னை மாவட்டத்தில் இருந்து முக்கிய நிர்வாகிகள் 20 பேர் சென்னை பசுமைவழிச்சாலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அவரது முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

இதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் 50 பேர் பொன்.ராஜா ஏற்பாட்டின்பேரில் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Exit mobile version