மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது மணிமண்டபத்தில் கலாமின் குடும்பத்தினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் கலாமின் அண்ணன் பேரன் சலீம் உட்பட அவரது குடும்பத்தினர் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், கலாமின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஊரடங்கு காரணமாக மக்கள் யாரும் மணிமண்டபத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கலாமின் அண்ணன் பேரன் சலீம், கலாமிற்கு மரியாதை செலுத்த நினைப்பவர்கள் அவரவர் வீடுகள் முன் நின்று கூட மரியாதை செலுத்தலாம் எனத் தெரிவித்தார்.
அப்துல்கலாமின் நினைவு நாளையொட்டி மதுரையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர், இரண்டாயிரத்து 20 விதைகளைக் கொண்டு அப்துல் கலாமின் உருவப்படத்தை உருவாக்கி உள்ளார். மதுரை செனாய் நகர் பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் வீடு வீடாக தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். அத்துடன், கொரோனா தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் தன்னார்வலராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி, வேங்கை உள்ளிட்ட 7 வகையான விதைகளை கொண்டு அப்துல்கலாமின் உருவப்படத்தை அசோக்குமார் தயார் செய்துள்ளார்.