53 – ஆண்டுகளாக இயங்கி வந்த அகஸ்தியா திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிப்பு!

மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், ஓடிடியில் திரைப்படங்கள் பார்க்கும் வசதி என சினிமா பரிணாம வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கும் நிலையில், பாரம்பரியமிக்க பழமையான திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் சென்னை தண்டையார்பேட்டை அகஸ்தியா திரையரங்கும் இணைந்துள்ளது.

நம் அனைவருக்கும், பொதுபோக்கு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது திரைப்படம் பார்ப்பதுதான். அப்படி, மக்களின் வாழ்வுடன் ஒன்றிவிட்ட திரைப்படங்களை, திரையரங்குகளில் பார்ப்பதே ஒரு தனி அனுபவம்தான். சென்னையில் திரைப்படம் பார்ப்பதற்கென்று முதன்முதலில் கட்டப்பட்ட திரையரங்கு கெயிட்டி. சிந்தாதிரி பேட்டையில், 1912-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த திரையரங்கு, நஷ்டம் காரணமாக 2005-ம் ஆண்டு மூடப்பட்டது. இப்படி எத்தனையோ பிரபல திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன.

அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது, தண்டையார் பேட்டையில் உள்ள அகஸ்தியா திரையரங்கம். 1967-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த திரையரங்கில், முதன் முதலில் வெளியிட்டப்பட்ட திரைப்படம் பாமா விஜயம். தொடர்ந்து, பல வெள்ளி விழா கண்ட திரைப்படங்களை வெளியிட்ட பெருமை இந்த திரையரங்குக்கு உண்டு. ரஜினி, கமல் மட்டுமல்ல, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோரின் திரைப்படங்களும் இத்திரையரங்கில் வெள்ளி விழா கண்டுள்ளன.

ஆயிரத்து 4 இருக்கைகள், 70 எம்.எம். அகல திரை, 50 ஆண்டுகளுக்கு மேல் சுகாதாரமாக இயங்கி வந்த குளிர்சாதன வசதியில்லா திரையரங்கு உள்ளிட்ட சிறப்புகளை கொண்ட அகஸ்தியா திரையரங்கு, நஷ்டத்தினால் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலதரப்பட்ட மக்கள், கொண்டாட்டங்கள், பல அரசியல் களங்களை முடிவு செய்த பெருமை, எத்தனையோ புதுமண தம்பதிகளுக்கு இடம் அளித்த இருக்கைகள், திரையில் கண்ட காதலை நிஜத்தில் மலர வைத்த மாளிகை, தற்போது மூடப்பட்டுவிட்டது.

என்னதான் வீட்டில் லேப்டாப், செல்போன்களில் OTT-யில் படம் பார்த்தாலும், இருண்ட அரங்கில், பெரிய திரையில், மக்களின் ஆரவாரத்திற்கு மத்தியில், பிடித்த நாயகனின் திரைப்படத்தை பார்ப்பதில் இருக்கும் இன்பம், அலாதியானதுதான். இத்தகைய இன்பத்தை நமக்கு வாரி வழங்கிய பல்வேறு திரையரங்குகள் மூடப்பட்டு வருவது ஆரோக்யமான சூழல் இல்லை என்பதே உண்மை.

Exit mobile version