கீழ்வெண்மணி சம்பவத்தின் 50வது ஆண்டு நினைவு தினம் இன்று

கீழவெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்கள் உயிருடன் கொளுத்தப்பட்ட வரலாற்றின் 50வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கூலியாக அரைப்படி நெல் உயர்த்தி கேட்டதற்கு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உட்பட 44 பேர் உயிரோடு ஒரே குடிசையில் வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 50வது நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் ஒன்றாக இருந்தபோது, பண்ணையாள் முறை இருந்தது. வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள், ஒன்றிணைந்து விவசாயிகள் சங்கத்தை உருவாக்கி அரைபடி நெல்லை கூலி உயர்வாக கேட்டனர். இதன் தொடர்ச்சியாக கீழவெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தாரர்கள் கட்டி வைத்து அடித்தனர். இதனால் கலவரம் மூண்டது.

1968 டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தில், கீழ்வெண்மணிக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த சிலர், விவசாயிகளை தாக்கினர். அப்பொழுது ராமையன் என்பவரது குடிசைக்குள் ஓடி ஒளிந்த கர்ப்பிணிகள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 44 பேரை வைத்து அடைத்து தீ மூட்டப்பட்டது.

இதில் அவர்கள் அனைவரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்து இன்று 50வது நினைவுதினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த சம்பவம் ஏற்படுத்திய வடு மறையாமல் இன்றும் நீள்கிறது.

ஆண்டுதோறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் வெண்மணி தியாகிகள் நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தினர். வெண்மணி படுகொலை சம்பவம் தங்களால் மறக்க முடியாத கோர நிகழ்வு என்று அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

Exit mobile version