கறுப்பர் கூட்டம் சேனலில் இருந்து 500 வீடியோக்கள் அதிரடியாக நீக்கம்!

இந்து கடவுள்களை இழிவுப்படுத்தும் வகையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இடம்பெற்றிருந்த, 500க்கும் அதிகமான வீடியோக்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தி கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், யூடியூப் சேனல் உரிமையாளர் செந்தில்வாசன் சென்னை வேளச்சேரியில் கடந்த 15 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுரேந்திரனை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், புதுச்சேரி அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதனை தொடர்ந்து, சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வந்த கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு சீல் வைத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், கறுப்பர் கூட்டம் சேனலை முடக்கக்கோரி யூடியூப் நிறுவனத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பினர். இந்த நிலையில், இந்து கடவுள்களை இழிவுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 500க்கும் அதிகமான வீடியோக்கள் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகியோரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், இன்று மனுத்தாக்கல் செய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version