50 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு – அஇஅதிமுக வரவேற்பு!

மருத்துவபடிப்பில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு, கட்சியின் சமூக நீதிக் கொள்கைக்கு கிடைத்த பரிசு என அஇஅதிமுக வரவேற்றுள்ளது.

அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்திய தொகுப்பிற்கு அளிக்கப்படும் இடங்களில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் எனக் கோரி , சென்னை உயர்நீதிமன்றத்தில் அஇஅதிமுக தொடர்ந்த வழக்கில், இட ஒதுக்கீடு வழங்கப்பட எந்த ஒரு சட்ட ரீதியிலான தடையும் இல்லை எனவும், மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுத்து , அடுத்த கல்வியாண்டிலிருந்து இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை அஇஅதிமுக நன்றியுடன் வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

சமூக நீதி காத்த வீராங்கனை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் அஇஅதிமுக பணியாற்றுவதை உலகிற்கு பறைசாற்றும் வகையில் இத்தீர்ப்பு அமைந்திருப்பதை பெருமையுடன் வரவேற்பதாகவும் அவுர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை , தமிழ் நாடு அரசு சுகாதாரத் துறை மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் அடங்கிய குழுவை அமைத்து , இட ஒதுக்கீடு குறித்த முடிவை மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் காலக்கெடு விதித்திருப்பது இத்தீர்ப்பின் பலன்கள் விரைவில் நடைமுறைக்கு வர வகை செய்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் சமூக நீதியை நிலைநாட்டி , அனைத்துத் தரப்பு மக்களும் வாழ்வில் முன்னேற்றம் கண்டிட அயராது உழைப்போம் என்ற அஇஅதிமுக வின் கொள்கைக்கு கிடைத்த பரிசாக இந்த தீர்ப்பினைப் போற்றி வரவேற்கிறோம் எனவும் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version