சுதந்திர தின விழா நடைபெற உள்ள சென்னை கோட்டையில், 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், காஷ்மீர் பிரச்சினையையொட்டி, பயங்கரவாதிகள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என்றும், இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை தகவல் அனுப்பி உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் காவல்துறைப் பாதுகாப்பை பலப்படுத்தி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டு உள்ளார்.
சுதந்திர தின விழாவையொட்டி சுழற்சி முறையில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின விழா உரை நிகழ்த்துகிறார். இதையொட்டி சென்னை கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என்றும், 75 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.