இந்திய மண்ணில் தரையிறங்கிய 5 ரஃபேல் போர் விமானங்கள்!!

இந்திய மண்ணில் தரையிறங்கிய ரஃபேல் போர் விமானங்களுக்கு விமானப்படை சார்பாக தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் இருந்து புறப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்களும் ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்திற்கு மதியம் 3 மணியளவில் வந்து தரையிறங்கின. அம்பாலா விமானப்படை தளத்தில் தரையிறங்கிய 5 ரஃபேல் போர் விமானங்களுக்கும் விமானப்படை சார்பாக தண்ணீரை பீய்ச்சி அடித்து வாட்டர் சல்யூட் அளிக்கப்பட்டது. கேப்டன் ஹர்கிரத் தலைமையிலான விமானிகள் குழு இயக்கி வந்த ரஃபேல் போர் விமானங்களை விமானப்படை தளபதி பதூரியா வரவேற்றார்.

முன்னதாக, சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்த ரஃபேல் போர் விமானங்கள், திட்டமிட்டப்படி இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தவுடன் இந்திய கடற்படை போர்க்கப்பலுடன் தமது முதல் தொடர்பை ஏற்படுத்தியது. அப்போது ரேடியோ சிக்னல்கள் மூலம் ரஃபேல் விமானங்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் மதியம் 3 மணியளவில் சுகோய் போர் விமானங்கள் பாதுகாப்புடன் 5 ரஃபேல் போர் விமானங்களும் ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தில் தரையிறங்கின. ரஃபேல் போர் விமானங்களின் வருகையால் இந்திய விமானப்படை பலம் மேலும் அதிகரித்துள்ளது.

ரஃபேல் போர் விமானங்களின் வருகை குறித்து ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நாட்டை பாதுகாப்பது பெருமைக்குரிய செயல் எனவும், போர் விமானங்களின் வருகையால் தேசத்தின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே வல்லமை மிக்க ரஃபேல் போர் விமானங்களின் வருகையால் இந்திய விமானப்படை மேலும் வலிமையடைந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இனி இந்திய விமானப்படையின் புதிய பலத்தைக் கண்டு, எல்லையில் அச்சுறுத்தல் விடுப்பவர்கள்தான் அஞ்ச வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version