சென்னையின் 5 இடங்களில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க திட்டம்

சென்னை நகரின் குடி நீர் பிரச்சினையை தீர்க்க நகரின் முக்கியமான 5 இடங்களில், கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அமைக்க, சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. இது குறித்த செய்தித்தொகுப்பை இப்போது காணலாம்…

சென்னையின் மக்கள் தொகை கிட்டத்தட்ட ஒரு கோடியை எட்டப்போகிறது. தினமும் ஒரு கோடி பேரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில், சென்னைக்கு அருகில் உள்ள பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஆனால், கடந்த 2 வருடங்களாக பருவ மழை பொய்த்து போனதால், இந்த ஏரிகள் அனைத்தும் வறண்டு விட்டன. தற்போதுள்ள நிலையில், வீராணம் ஏரி, மீஞ்சூர், நெம்மேலி ஆகிய கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மட்டுமின்றி, கல்குவாரிகள், கிணறுகளில் இருந்து பெறப்படும் நீரில் இருந்தே, ஓரளவு சென்னை நகரின் குடிநீர் தேவை சமாளிக்கப்பட்டு வருகிறது. சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தின் அனைத்து பகுதி குடிநீர் தேவைகளை நிறைவேற்ற, அரசு, போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உடனுக்குடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகிறார். இந்த நிலையில்தான், சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிரந்தரமாக தீர்க்கும் வகையில், 5 இடங்களில், கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. காசிமேடு, திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, எம்.ஆர்.சி நகர் மற்றும் திருவான்மியூர் ஆகிய 5 பகுதிகளில், கடல் நீரை குடிநீராக்கும் மையங்கள் செயல்பட உள்ளன. சுமார் 120 கோடி ரூபாய் செலவில், அடுத்த 6 மாதங்களுக்குள் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, குடிநீர் தட்டுப்பாடு வெகுவாக குறையும் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவிக்கின்றனர். 

இது குறித்து திருநாவுக்கரசு, முன்னாள் பொதுப்பணித்துறை அதிகாரி கூறியதாவது: சென்னை நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த மழை நீர் சேகரிப்பு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் எனவும், நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க குடிநீர் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதே நேரம், நகரின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் செயல்படுத்த முனைவது, அனைவரது பாரட்டையும் பெற்றுள்ளது.

Exit mobile version