உதகையில் சுற்றுலாப் பயணிகளைக் கவர 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு 5 லட்சம் மலர்ச் செடிகளின் நாற்றுகள் நடவு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள அரசு தாவரவியல் பூங்காவில், ஆண்டு தோறும் கோடை சீசனில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். அவர்களுக்காகப் பூங்காவில் நூற்றுக்கணக்கான மலர்கள் பார்வைக்கு வைக்கப்படும். அடுத்த ஆண்டு கோடை சீசனுக்காகவும், 124ஆவது மலர்க் கண்காட்சிக்காகவும், பூங்காவில் மலர்ச் செடிகளின் நாற்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 400 வகையிலான மலர்ச் செடிகளின் நாற்றுகளைப் பூங்காவின் பல இடங்களிலும், பூந்தொட்டிகளிலும் நடவு செய்யும் பணியை, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோடை சீசனுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், பூங்காவில் 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

Exit mobile version