சென்னை புழல் அருகே, பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை, பணத்துக்காக விற்றுவிட்டு, கடத்தப்பட்டதாக நாடகமாடிய தாயையும், குழந்தை விற்பனை கும்பலையும், போலீசார் கைது செய்துள்ளனர். அந்த குழந்தை கடத்தல் நாடகத்தின் பின்னணியைச் சொல்கிறது, இந்த செய்தித் தொகுப்பு…
நவம்பர் 27ஆம் தேதி, வேப்பேரி காவல் நிலையத்துக்கு கண்ணீரும் கம்பலையுமாக வந்து நின்றார் புழல் காவாங்கரையைச் சேர்ந்த யாஸ்மின். தனது 5 நாள் ஆண் குழந்தையை எண்ணூரைச் சேர்ந்த தனமும், மேலும் இருவரும் கடத்திச் சென்றதாகவும், அப்போது இரண்டரை லட்சம் பணத்தை பறித்துச் சென்றதாகவும் புகார் அளித்தார்.
குழந்தை கடத்தல் என்பதால், பரபரத்த போலீசார், விசாரணையில் இறங்கியபோதுதான், யாஸ்மினின் நாடகம் அம்பலத்துக்கு வந்தது.யாஸ்மினுக்கும், மோகன் என்பவருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
ஆஸ்துமாவில் பாதிக்கப்பட்ட யாஸ்மின், மீண்டும் 5 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமாக மோகன் பிரிந்து சென்றுள்ளார்.
இதனால் வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்ட யாஸ்மின், கருவைக் கலைத்துவிட முடிவு செய்து, தனக்குப் பழக்கமான எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ஜெயகீதாவிடம் கூறியுள்ளார்.
ஆனால் ஜெயகீதாவோ, கருவை கலைக்காமல், குழந்தையை பெற்றுக் கொள். அதனை சில லட்சங்களுக்கு விற்று காசாக்கிவிடலாம் என்று ஆசை காட்டவே, யாஸ்மினுக்குள்ளும் ஒரு திட்டம் உருவாகியிருக்கிறது.
வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் யாஸ்மின் நவம்பர் 21ஆம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதனை விற்பதற்கான ஏற்பாடுகளை ஜெயகீதா தனக்குப் பழக்கமான குழந்தை விற்பனை இடைத்தரகர்கள் ஆரோக்கியமேரி, லதா ஆகியோருடன் சேர்ந்து செய்திருக்கிறார்.
அதன்படி, நவம்பர் 25ஆம் தேதி, யாஸ்மின் மூத்த மகளுடனும் 5 நாள் கைக்குழந்தையுடனும், ஜெயகீதாவுடன் சேர்ந்து புரசைவாக்கம், சரவணா ஸ்டோர் அருகே காத்திருந்துள்ளனர்.
அப்போது, தனம் அழைத்து வந்த தம்பதியிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு, இரண்டரை லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு, ஆட்டோவில் யாஸ்மின்அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.
இதுவரை எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருக்க… யாஸ்மினின் மாஸ்டர் பிளான் இங்கேதான் வேலை செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். பணமும் வேண்டும் குழந்தையும் வேண்டும் என்று முடிவு செய்த யாஸ்மின், அதற்காகவே, குழந்தையை கடத்தியதாக புகார் அளித்தது தெரியவந்தது.
இதனிடையே ஜெகன் என்பவர் தனது மனைவி சந்தியாவுடன் வேப்பேரி காவல்நிலையத்தில் வாண்டடாக ஆஜராகியவர், யாஸ்மின் தன்னிடம் பணத்தைக் கொடுத்து வைத்ததாகவும், மீண்டும் பெற்றுச் சென்றதாகவும் தகவல் அளித்தார்.
இதையடுத்து, யாஸ்மினின் கணக்கை கூட்டிக் கழித்த போலீசார், யாஸ்மின், ஜெயகீதா, தனம், இடைத்தரகர்கள் லதா, ஆரோக்கிய மேரி ஆகியோரிடமும் விசாரித்தனர்.
அப்போது, ஆரோக்கியமேரியுடன் பணியாற்றும் ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த சிவகுமாருக்கு, குழந்தை விற்கப்பட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மூலகொத்தளத்தில் சிவகுமாரின் மனைவி வைத்திருந்த குழந்தையை மீட்ட போலீசார், அமைந்தகரையில் உள்ள சுரபி காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
யாஸ்மின், ஜெயகீதா, தனம் மற்றும் சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இடைத்தரகர்கள் லதா, ஆரோக்கிய மேரியை போலீசார் தேடி வருகின்றனர்.
-நியூஸ் ஜெ செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயக்குமார் மற்றும் ஆசாத்……