டெல்லியில் புதிதாக கட்டப்படும் கண்காட்சி மையத்தின் வாயிலாக 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில், சர்வதேச அளவிலான மாநாடுகள், கண்காட்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தும் வகையிலான அரங்கம் கட்டுவதற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் 80 கோடி இளைஞர்களின் சக்தி மற்றும் செயல்பாடுகளுக்கான மையமாக இது திகழும் என்றும் என்று குறிப்பிட்டார். 25 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தக் கண்காட்சி மையத்தின் மூலம், சுமார் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.
டெல்லியில் சிறிய நகரம் போன்ற தோற்றத்தை புதிய கண்காட்சி மையம் உண்டாக்கும் என்றும், 2022ஆம் ஆண்டிற்குள் இந்திய பொருளாதாரத்தை 2 மடங்கு அதிகரிக்க புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இளைஞர்கள் மூலமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். குறிப்பாக, தேசிய நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு ஒருபோதும் பின்வாங்காது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
முன்னதாக, அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக புறப்பட்ட பிரதமர் மோடி, தவ்லா குவான் முதல் துவர்கா வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். மக்களோடு மக்களாக இணைந்து பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியுடன் சக பயணிகளும் செல்ஃபி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.