4வது டெஸ்ட் போட்டி டிரா : 71 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக தொடரை வென்றது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 5வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டதால், ஆட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, 71 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி, புஜாரா, மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோரின் அபார சதத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

322 ரன்கள் பின் தங்கிய, ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன் ஆனது. 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் ஃபாலோ ஆன் ஆனது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை விளையாட தொடங்கியது. 6 ரன்கள் எடுத்திருந்த போது மோசமான வானிலை காரணமாக 4ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், இன்று 5ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது இதனால், ஆட்டம் கைவிடப்பட்டு டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, 71 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

Exit mobile version