காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்ததால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 700 கன அடியாக குறைந்துள்ளது.
5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் தாக்கம் குறைந்ததால், 4 ஆயிரத்து 700 கன அடியாக குறைந்தது. பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்தும் கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும், வெள்ளப்பெருக்கின் போது ஏற்பட்ட சேதங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 128-வது நாளாக அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 998 கன அடியாக குறைந்துள்ளது. காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 4 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.