தமிழ்நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதி விசைப்படகு மீனவர்களின் மீன்பிடி தடைக்காலம், 47 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கு கடற்கரையில் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14ம் தேதி வரையும், மேற்கு கடற்கரையில் ஜுன் ஒன்றாம் தேதி முதல் ஜுலை 31 ஆம் தேதி வரையும் தலா 61 நாட்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய மீன்வளத்துறை, மீன்பிடித் தடைக்காலம் 47 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் என்ற திருத்திய அரசாணையை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி, கொரோனா நோய்க்கட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுத்தம் செய்துள்ள கிழக்கு கடற்கரைப் பகுதி மீனவர்கள், வரும் ஒன்றாம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம் என தெரிவித்துள்ளார். மேற்கு கடற்கரைப் பகுதி மீனவர்கள், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம் என்றும், இதன்மூலம், மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், இந்த தொழிலை சார்ந்துள்ளவர்களும் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.