தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 4 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கொரோனா நோய்த்தொற்றினை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு வரும் திங்கள் முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, ஞாயிற்றுக்கிழமை வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஆயிரத்து 500 பேருந்துகள், சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கும், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் இடையே 3 ஆயிரம் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. மேற்கண்ட இரு நாட்களில் பயணிகளின் தேவைக்கேற்ப இரவு நேர பேருந்து சேவை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து மாநகர பேருந்துகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.