உயர்கல்வித் துறையில் 44 புதிய அறிவிப்புகள்: அமைச்சர் கே.பி.அன்பழகன்

சட்டப்பேரவையில் உரையாற்றிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உயர்கல்வித்துறையில் மொத்தம் 44 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, 23 அரசு தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு 100 எம்பிபிஎஸ் அளவிலான தொடர் இணையதள வசதி ஏற்படுத்த 4 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும், கல்லூரி வளாகங்களில் இரண்டரை கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனவும், சென்னை பல்கலைக்கழகத்தின் அனைத்து வளாகங்களிலும் மகளிர் பாதுகாப்பு வசதி மையம் நிறுவ ஒன்றரை கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உதகை அரசு கலைக்கல்லூரி கட்டடங்கள் 8 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து பாதுகாக்கப்படும், அண்ணா பல்கலைக்கழகத்தில் உணவக கட்டடம் மற்றும் இயந்திரவியல் துறையில் ஆய்வகக் கட்டடம் அமைக்கப்படும்,  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிய மகளிர் விடுதி கட்டடம் கட்டப்படும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உயிர் மருத்துவ அறிவியல் புலம் அமைக்கப்படும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும், அழகப்பா பல்கலைக்கழகத்தில் தாவர நெகிழி பயன்பாடு மையம் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version