ஜெய்ஷ் இ முகமது இயக்கத் தலைவன் மசூத் அசார் சகோதரர் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தீவிரவாத இயக்கங்களின் கூடாரமாக பாகிஸ்தான் உள்ளது. இதையடுத்து பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் அந்த நாடு எதிர்கொண்டுள்ளது. இதனால் உலக நாடுகளின் கண்டனங்களுக்கும் உள்ளாகியுள்ளது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசாரின் சகோதரர் முப்தி அப்துர் ராப் உள்ளிட்ட 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேர்யார் கான் அஃப்ரிடி கூறுகையில், மசூத் அசார் சகோதரன் முஃப்தி அப்துர் ராஃப் மற்றும் ஹம்மது அசார் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எந்த நிர்பந்தத்தின் அடிப்படையிலும் இந்த கைது நடவடிக்கை நடைபெறவில்லை என்று கூறியுள்ள அவர், தேசிய பாதுகாப்பின் அடிப்படையிலேயே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அடுத்த சில வாரங்களுக்கு இந்த நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்தார்.
தீவிரவாதிகளின் இடமாக பாகிஸ்தான் எப்போதும் இருக்காது என்றும் அவர் கூறினார். இதனிடையே ஜெய்ஷ் இ முகமது இயக்கத் தலைவன் மசூத் அசாரும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.