மனித நாகரிகங்கள் ஆற்றங்கரைகளில்தான் தோன்றின. அந்த நாகரிகங்களில் மிகவும் முக்கியமான நாகரிகம் எகிப்து நாகரிகம் ஆகும். பண்டைய நாகரிகங்களில் மிகவும் பழமையான நாகரிகங்களில் ஒன்றும் இதுவே. எகிப்து என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவினில் வருவது அங்கு உள்ள பிரமிடுகளும் மம்மிகளும் தான். உலக அதிசயங்களில் ஒன்றாக பிரமிடுகள் பார்க்கப்படுகிறது. உலக நாடுகளையே இந்த பிரமிடுகளின் கட்டமைப்பானது புகழும் அளவிற்கு அதன் கட்டுமானம் உள்ளது. மேலும் இந்தக் கட்டுமானம் பலருக்கு புதிராகவும் தெளிவில்லாமலும் இருக்கிறது.
பிரமிடுகளை பண்டைய எகிப்தியர்கள் தங்களின் முன்னோர்களின் ஈமக்காரியங்களுக்கான இடமாகவே வடித்து வைத்திருந்திருக்கிறார்கள். அதிலும் அரசர் அரசிகள் மற்றும் அரசகுடும்பத்தினர்கள் போன்றோர்களின் இறந்த உடல்களை மஸ்ஸீன் துணியினால் கட்டி ஒருவித திரவத்தினை கலந்து சவப்பெட்டிக்குள்ளோ அல்லது அப்படியேவும் போட்டு வைப்பர். உடல் அழுகாமலும் சிதைவடையாமலும் இருப்பதற்கு அவர்கள் இந்த யுக்தியைப் பயன்படுத்துகிறார்கள். எகிப்தியர்களிடம் மரணத்திற்கு பிறகும் வாழ்வு உண்டு என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. இந்த மம்மிகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கே அவர்கள் பிரமிடுகளை கட்டினார்கள். மேலும் இந்த மம்மிகளை வைத்து ஹாலிவுட்டில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு சக்கைபோடு போட்டிருகின்றன.
இந்த மம்மிகள் மற்றும் பிரமிடுகள் சார்ந்த ஆய்வானது ஆராய்ச்சியாளர்களால் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது எகிப்திலுள்ள கெய்ரோவின் தெற்கே உள்ள சக்காரா நெக்ரோபோலிஸ் என்ற பகுதியில் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் 4,300 ஆண்டுகள் பழமையான மம்மி இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த மம்மிதான் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்ட மம்மி என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் பண்டைய எகிப்தியர்கள் இந்த மம்மியை எங்கு விட்டு சென்றார்களோ அது அங்கேயே இருந்துள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறினார்கள். மேலும் அருகில் உள்ள புதைகுழியில் நான்கு அறைகள் புதைந்துள்ளன. இந்த அறைகள் ஐந்தாவது முதல் ஆறாவது சாம்ராஜ்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்றும் அது கிமு 25 மற்றும் கிமு 24 ஆக இருக்கலம் என்றும் கூறினார்கள். இந்த மம்மியனாது எகிப்தினை ஆட்சி செய்த ஐந்தாவது வம்சத்தின் கடைசி மன்னரான உனாஸின் பிரமிடு அருகே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ராஜ வம்சத்தை சேர்ந்த சீக்ரெட் கீப்பர் ஒருவரது உடலும் கிடைத்துள்ளது.