தமிழகத்தில் 4000 மெகாவாட் மின் உற்பத்திக்கான பணிகள் நடைபெற்று வருவதாக மின் துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் ஒன்றியத்தில் அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த மின் துறை அமைச்சர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தின் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக நீர்மின் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
கொல்லிமலை நீர்மின் திட்டம் நிலம் கையகப்படுத்துவதில் தாமதமானதாகவும், தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டதால், தீபாவளிக்கு பிறகு அத்திட்டத்திற்கு பூமி பூஜை போடப்படும் என்றார். ஏற்கனவே தமிழகத்தில் 4000 மெகாவாட் மின் உற்பத்திக்கான பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், நீதிமன்ற தீர்ப்பின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.