தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 40 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் ராஜேந்திரகுமார் ஜெயின் தலைமையில் காணொலி மூலம் நடைபெற்றது. ஆலோசனையில், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பொதுப்பணித்துறை செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தமிழகம் சார்பாக பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர்.கே.மணிவாசன் கலந்துக் கொண்டார். அப்போது, மேகதாது அணை கட்டுவது தொடர்பான கோரிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசு தரப்பின் கருத்திற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக, மேகதாது அணை கட்டுவது தொடர்பான கோரிக்கை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. மேலும், தமிழகத்திற்கு இம்மாதம் வழங்க வேண்டிய 9.19 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா உடனடியாக திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜூலை மாதத்திற்கு 31.24 டி.எம்.சி தண்ணீரை வழங்கவும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.