"எப்போது சந்தைக்கு வரும்-2DG மருந்து ?"-உயர்நீதிமன்றம் உத்தரவு

DRDO(Defence Research and Development Organisation) கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்து எப்போது சந்தைக்கு வரும் என விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2DG(2-Deoxy-D-glucose) மருந்தை, சந்தைக்கு கொண்டு வரக் கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், 2DG மருந்தை உற்பத்தி செய்ய 40 நிறுவனங்கள் முன் வந்துள்ளதாகவும், அந்த நிறுவனங்களின் தகுதி குறித்து ஆய்வு செய்யப்படுவதாவும் தெரிவித்தார்.

இதையடுத்து ஆந்திர மாநிலம், கிருஷ்ணாம்பட்டினத்தில் ஆனந்தய்யா என்பவர் கண்டுபிடித்த மருந்து, அரை மணி நேரத்தில் கொரோனா தொற்றை குணப்படுத்துவதாக வெளியான செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவரை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் அழைத்து பேசி, அங்கீகாரம் அளித்திருக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து 2DG உற்பத்தி குறித்த விவரங்களையும், ஆனந்தய்யா கண்டுபிடித்த மருந்துக்கான அங்கீகாரம் குறித்தும் தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Exit mobile version