கைலாசா நாட்டில் குடியுரிமை கேட்டு உலகம் முழுவதும் இருந்து 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதால் கைலாசா நாட்டை அமைத்தே தீருவேன் என நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
வழக்கம் போல் நித்யானந்தா நேற்று சமூக வலைதளத்தில் தோன்றி சொற்பொழிவாற்றினார். அதில், கைலாசா நாடு அமைக்கும் திட்டத்தால் எனக்கு அடிதான் விழும் என்று நினைத்ததாகவும், ஆனால் அதற்கு மாறாக ஆதரவு பெருகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், கைலாசா நாட்டில் குடியுரிமை கேட்டு உலகம் முழுவதும் இருந்து 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று கூறியுள்ளார். கைலாசாவை அமைத்தே தீருவேன் என்றும், இதில் எந்த சமரசமும் கிடையாது எனவும் பேசியுள்ளார். இதனிடையே, நித்யானந்தாவை கண்டுபிடிக்க கர்நாடகா உயர்நீதிமன்றம், பெங்களூரு காவல்துறையினருக்கு விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நித்யானந்தா சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வரும் வீடியோக்களை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அதில் நித்யானந்தா அமெரிக்காவில் உள்ள ஒரு தீவில் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்ய பெங்களூரு காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.