குடிப்பழக்கத்தை கைவிட 40 நாள் ஊரடங்கு நல்ல வாய்ப்பு!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கும், இந்த 40 நாட்களை மதுப்பழக்கம் உள்ளவர்கள் நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டு, மதுப் பழக்கத்தில் இருந்து விடுபட முடியும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். அதுபற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பை இப்போது பார்க்கலாம். மதுவுக்குப் பதிலாக கை கழுவும் சானிடைஷனரை குடித்தவர் பலி… மதுவுக்குப் பதிலாக பெயிண்ட் அடிக்கும் வார்னிஷைக் குடித்தவர்கள் பலி… மதுவுக்குப் பதிலாக சேவிங் லோஷனைக் குடித்தவர்கள் பலி… மதுவுக்குப் பதிலாக மெத்தனாலைக் குடித்தவர்கள் பலி… என இந்த ஊரடங்கு காலத்திலும், மதுவுக்கு அடிமையானவர்களின் மரணச் செய்திகள் தினமும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையைவிட, மதுவிற்காக மாற்றுப் பொருளைக் குடித்தவர்களின் பலி எண்ணிக்கை இருமடங்காக உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து, உலகமே ஓரணியில் நின்று நடத்தும் போரில், பொதுமக்களுக்கு இடையிலான, தனி மனித இடைவெளி தவிர்க்க முடியாததாகிறது. அதன்காரணமாக, பசிபிக் பெருங்கடலின் மேற்கில் அமெரிக்கா முதல் கிழக்கில் ரஷ்யா வரையிலும், ஆர்டிக் பெருங்கடலில் வடக்கில் கீரின்லாந்து முதல் தெற்கில் தென் ஆப்பிரிக்கா வரை, உலகில் உள்ள 7 கண்டங்களிலும்… 7 கண்டங்களில் உள்ள 99 சதவிகித நாடுகளிலும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்தியா முழுவதும் முதல் கட்டமாக 21 நாட்களும், இரண்டாம்கட்டமாக 19 நாட்களும் என மொத்தம் 40 நாட்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் மதுக் கடைகளுக்கு மட்டும் விதிவிலக்குக் கொடுக்க முடியுமா? அதனால், அத்தியவாசியப் பொருட்களின் பட்டிலியல் இல்லாத… அதிகமாக கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட மதுக்கடைக்களுக்கும் பூட்டுப்போடப்பட்டது. அதன்காரணமாக, தினமும் மது அருந்திப் பழகியவர்களின் பாடு பெரும் திண்டாட்டமாக மாறிவிட்டது.

ஊரடங்கின் கடைசி நாளாள அறிவிக்கப்பட்டுள்ள, மே 3-ம் தேதிக்குப் பிறகு, மத்திய-மாநில அரசுகளிடம் இருந்து என்ன மாதிரியான அறிவிப்பு வரப்போகிறது என்பது தெரியாதநிலையில், மது அருந்துபவர்கள் இன்னும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அதோடு அவர்களில் பலருக்கும், கை,கால் நடுக்கம், தூக்கமின்மை, தலைவலி போன்ற உடல் ரீதியான தொந்தரவுகளும் ஏற்படத் தொடங்கி இருக்கிறது. இதுபோன்ற இக்கட்டான சூழலில், அவர்களது குடும்பத்தினரும், நண்பர்களும் அவர்களைப் பொறுப்பாக கவனித்துக கொள்ள வேண்டும் என்றும், இந்தச் சந்தர்ப்பதைப் பயன்படுத்தி, அவர்களை அந்தப் பழக்கத்தில் இருந்து விடுவிக்க முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மனநல மருத்துவர்கள்.

மதுப் பழக்கம் உடையவர்கள், மது கிடைக்காத காரணத்தால், அதிக மன அழுத்தத்தில் இருப்பார்கள் என்றும், அதனால், அவர்களிடம் கோபமாகவோ பேசுவதை, அவர்களுக்குப் பிடிக்காதவற்றை செய்வதைக் குடும்பத்தினர் கவனமாகத் தவிர்க்க வேண்டும் என்றும் மனநல மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். அதேசமயத்தில், பல மதுபானப் பிரியர்கள் பலர் மதுவுக்கு தடை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், தங்களின் துயரத்தை, வேடிக்கையான மீம்ஸ்களாகவும், டிக்டாக்கில் நகைச்சுவைக் காட்சிகளாக நடித்தும் ஜாலியாகப் பொழுதைக் கழிக்கின்றனர். மேலும், பலர் தங்கள் குடும்பத்தினருடன் கூடுதலாக நேரம் செலவழிக்கவும் செய்கின்றனர். இவர்களைப்போல மதுப் பழக்கம் உள்ள மற்றவர்களும், ஜாலியான, ஆரோக்கியமான விஷயங்களின் பக்கம் தங்களின் கவனத்தைத் திருப்பினால், மதுப்பழக்கத்தில் இருந்து முற்றிலும் வெளிவர முடியும். அவர்கள் வெளிவர வேண்டும் என்பதுதான், அவர்களுடைய குடும்பத்தினரின் விருப்பமும்… எதிர்பார்ப்புமாக இருக்கவும் முடியும்!

Exit mobile version