கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி தமிழ்நாட்டின் 21-வது முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி, பதவியேற்றார். இந்த 4 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் ஏராளமான புதிய திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் நமது முதலமைச்சர். இதுகுறித்த செய்தித் தொகுப்பு!
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் போட்ட முதல் கையெழுத்து பணிபுரியும் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க 50 சதவிகித மானியம் வழங்கும் திட்டம், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவியினை 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கும் ஆணை ஆகியவை ஆகும்.
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதுடன், தமிழ்நாடு தொடர்ந்து மின் மிகை மாநிலமாகவும் திகழ்கிறது.
தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என சூளுரைத்த முதலமைச்சர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், திருச்சி, கரூர் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து புதிய வரலாறு படைத்தார்.
குடிமராமத்து திட்டங்களின் மூலம் 5,586 நீர்நிலைகள் மீட்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் 60 ஆண்டு கனவான அத்திக்கடவு – அவிநாசி திட்டம், காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதில் இருந்து மீட்க ‘நடந்தாய் வாழி காவேரி திட்டம்’ போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்க்கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை பாதுகாத்தவர் முதலமைச்சர்.
அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு சட்டத்தின் மூலம், மருத்துவப் படிப்பில், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, நடப்பாண்டில் 435 ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றினார். 11 மாவட்டங்களில் மருத்துவமனையுடன் கூடிய புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.
கொரோனா காலத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் 2000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்புப் பணியில் இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது. நாட்டிலேயே அதிக பரிசோதனைகள் செய்த மாநிலம் என்ற பெருமையும் தமிழ்நாட்டிற்கே உண்டு. கொரோனா காலத்திலும், 86 ஆயிரத்து 478 கோடி மதிப்பிலான 84 திட்டங்களை தமிழ்நாடு அரசு ஈர்த்து, தேசிய அளவில் முன்னிலை வகிக்கிறது.
ஊரடங்கின்போது, மாநிலம் முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, 1,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி, 2,500 ரூபாய் நிதியுதவியுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்பட்டன.
‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ ஆகிய 2 புயல் பாதிப்பின் போது, அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையால், உயிர் இழப்புகள் மற்றும் சேதம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. புயலையும் பொருட்படுத்தாது செம்பரம்பாக்கம் ஏரிக்கே சென்று பார்வையிட்டார் முதலமைச்சர்.
தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான தைப்பூசத்தை பொது விடுமுறையாக அறிவித்தார்.
மத்திய அரசு அறிவித்த நல் ஆளுமைத் திறனுக்கான குறியீட்டுப் பட்டியலில், தமிழ்நாடு முதல் இடத்தைப் பெற்றது.
‘இந்தியா டுடே’ நடத்திய ஆய்வில், ‘ஒட்டுமொத்த செயல்திறன் மிக்க மாநிலமாக’ தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த நான்காண்டு ஆட்சி நான்கு திசையும் போற்றும் ஆட்சியாக வீறுநடை போட்டு வருகிறது…