சென்னை அமைந்தகரையில் கடத்தப்பட்ட சிறுமியை, காவல்துறை துரிதமாக செயல்பட்டு 8 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். புகார் அளித்ததில் இருந்து கடத்தல்காரர்களை பொறி வைத்து பிடித்தது வரை காவல்துறையினரின் துரித நடவடிக்கைகளை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
சென்னை அமைந்தகரையை சேர்ந்த அருள்ராஜ், நந்தினி தம்பதியின் நான்கு வயது மகள் அன்விகா தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். கடந்த 18 ஆம் தேதி சிறுமி அன்விகா பள்ளிக்கு சென்றுள்ளார். சிறுமியை அழைத்து வர சென்ற, பணிப்பெண் அம்பிகா வீடு திரும்பவில்லை. காதலன் முகமது கலிபுல்லா சையத் உடன் சேர்ந்து பணிப்பெண் அம்பிகா, சிறுமியை கடத்தியதோடு, 60 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர், அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, சிறுமியை மீட்க 7 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையில் குதித்தது காவல்துறை.
சிறுமியை கடத்திய முகமது கலிபுல்லா சையதை செங்குன்றம் அருகே உதவி ஆய்வாளர் சதீஷ் தலைமையிலான தனிப்படையினர் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட கலிபுல்லா கொடுத்த தகவலின் பேரில், தனியார் விடுதியில் தங்கியிருந்த பணிப்பெண் அம்பிகாவை கைது செய்த மற்றொரு தனிப்படை காவல்துறையினர், சிறுமி அன்விகாவை மீட்டனர்.
இவை அனைத்தையும் சினிமா பாணியில் 8 மணி நேரத்தில் சாதித்து காட்டியது சென்னை காவல்துறை. இவற்றுக்கு எல்லாம் மகுடம் சூட்டியது போல் அண்ணா நகர் காவல் நிலையத்திற்கே வந்து, களத்தில் இறங்கி வழிகாட்டியுள்ளார் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.
கடத்திய 8 மணி நேரத்திற்குள் சிறுமியை மீட்டு கொடுத்த காவல்துறைக்கு, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கும் சிறுமியின் பெற்றோர் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர். தன்னை மீண்டும் பெற்றோருடன் சேர்த்து வைத்த காவல்துறை அதிகாரிகளுக்கு, சிறுமி அன்விகா ரோஜா பூ கொடுத்து நெகிழ வைத்தார்.
பெற்றோருடன் சென்ற சிறுமிக்கு இனிப்புகளை வாங்கி கொடுத்து காவல்துறை அதிகாரிகள் வழியனுப்பு வைத்தனர்.