காஞ்சிபுரத்தில், மனித வள மேம்பாட்டு அதிகாரிகளாக நாடகமாடி, பொறியியல் மற்றும் டிப்ளமோ மாணவர்களை பண மோசடி செய்த 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், பிரபல பன்னாட்டு நிறுவனத்தின் மனிதவள அதிகாரி என கூறிக்கொண்டு ஞானசேகர், சுல்தானா கான், விஜய், குமரன் ஆகிய 4 நபர்கள், 59 பொறியியல் மற்றும் டிப்ளமோ மாணவ மாணவிகளை நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுத்துள்ளனர்.
மேலும், அவர்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 50 லட்ச ரூபாய்க்கு மேல் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளனர். தாங்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவ, மாணவிகள் காஞ்சிபும் மாவட்ட குற்றப் பிரிவு துணை கண்காணிப்பாளர் தென்னரசு அவர்களிடம் புகார் மனு அளித்தனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், சென்னை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் தலைமறைவாக இருந்த 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.