பாஜகவில் இணைந்த தெலுங்குதேசம் கட்சியின் 4 எம்.பிக்கள்

தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.

டெல்லியில் தெலுங்குதேசம் கட்சியின் நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒய்.எஸ் சவுத்ரி, சி.எம். ரமேஷ், ஜி. மோகன் ராவ், டி.ஜி. வெங்கடேஷ் ஆகியோர், பாஜக தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசினர். இதனை தொடர்ந்து, அந்த 4 பேரும், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவையும் நேரில் சந்தித்து, மாநிலங்களவையில் தங்களை தனி அணியாக அங்கீகரிக்குமாறு கோரிக்கை மனுவை அளித்தனர். இதையடுத்து, எஸ் சவுத்ரி, சி.எம். ரமேஷ், ஜி. மோகன் ராவ், டி.ஜி. வெங்கடேஷ் ஆகியோர் பாஜக செயல் தலைவர் ஜெ.பி. நட்டா முன்னிலையில், பாஜகவில் இணைந்தனர். தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாஜகவில் இணையும் நிகழ்ச்சிக்கு வர முடியாத ஜி. மோகன் ராவ், விரைவில் பாஜகவில் இணைவார் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஐரோப்பிய நாடுகளில் குடும்பத்துடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version