கிட்னி தானம் செய்தால் 4 கோடி தரப்படும் – மோசடி கும்பல் குறித்த சிறப்பு பார்வை!

கிட்னி தானம் செய்தால் 4 கோடி ரூபாய் தரப்படும் என்று தனியார் மருத்துவமனை பெயரில் இனையதளம் மூலமாக விளம்பரம் செய்து, பதிவுக் கட்டணமாக லட்சக்கணக்கான ரூபாயைச் சுருட்டி வரும் கும்பல் குறித்த செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்….

கிட்னி தானம் செய்தால் 4 கோடி தரப்படும்’ என முகநூல் மற்றும் வாட்ஸ்அப்பில் விளம்பரம் செய்து பிரபல தனியார் மருத்துவமனை பெயரை கூறி பதிவு கட்டணமாக பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை நூதன முறையில் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் அந்த முகநூல் கணக்கையும், அதில் இருந்த தொடர்பு எண்ணையும் பெற்று கொண்டு கள ஆய்வில் இறங்கியது நமது செய்தி குழு…

விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட எண்களை வாட்ஸ் அப்பில் மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்தது. அந்த எண்ணில் இருந்த வந்த பதிலில், தனது பெயர் டாக்டர் ஜான்சன் என்றும், ஃபோர்டிஸ் மருத்துவமனையின் பிரதிநிதி எனவும் தகவல் கிடைத்தது. கிட்னி தானம்… அதாவது விற்க ஒப்புக்கொண்டதும், சுய விவரங்களை கேட்டறிந்தனர். அவர்களுடைய வாட்ஸ் அப் தகவலில், நேர்மையானவர்களைப் போல உடல் உறுப்புகள் தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான சட்ட விதிகளை கூறினர். மேலும் கிட்னி தானம் செய்வதற்கான தொகையில் பாதி தொகையான 2 கோடி ரூபாயை அறுவை சிகிச்சை பெறுவதற்கு முன்பும், மீதி தொகையை அறுவை சிகிச்சை முடிந்த பின்னரும் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டனர்.

இந்த விதிமுறைகளுக்கு சரியென்றதும், கொடையாளர் அட்டை வாங்க 9 ஆயிரத்து தொள்ளாயிரத்து 99 ரூபாயயை அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பவேண்டும் எனக் கூறினர். அதன்பிறகு 2 அல்லது மூன்று மணி நேரத்திற்குள் தங்களுடைய வங்கி கணக்கில் 2 கோடி ரூபாய் பணம் வந்து சேரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனையின் வங்கிக் கணக்கை அனுப்பாமல், தனி நபர் ஒருவரின் வங்கி கணக்கு அனுப்பப்பட்டது. 1 மணி நேரத்திற்கு ஒருமுறை தொடர்ச்சியாக அழைப்பு விடுத்த நபரிடம் பணம் தற்போது இல்லை என்று கூறி அட்வான்ஸ் தொகையில் கழித்துகொள்ள கேட்டபோது, அது தங்களது பாலிசி என்றும் பணத்தை விரைவாக அனுப்பும்படியும் கூறினர்.

இது குறித்து சென்னை அடையாறில் இருக்கும் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையை தொடர்பு கொண்டபோது, இதுபோன்ற விளம்பரங்கள் ஏதும் கொடுக்கவில்லை என்றும், இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

சென்னையில் வறுமையில் வாடும் பலர் இது போல் 4 கோடிக்கு ஆசைப்பட்டு, ஆயிரக்கணக்கான பணத்தை இழக்கின்றனர்.
இது போன்ற மோசடி பேர்வழிகளிடம் ஏமாற வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கூறிவரும் நிலையில், இணையதளங்களில் வரும் விளம்பரங்களை பார்த்து பணத்தை இழக்காமல், ஆராய்ந்து செயல்பட வேண்டும் எனவும் காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

 

Exit mobile version