போலி நகைகளை கொடுத்து ஏமாற்றி புதிய நகைகளை வாங்கிச்சென்ற நான்கு பேர் கைது

திருவள்ளூரில், போலி நகைகளை கொடுத்து ஏமாற்றி, 22 சவரன் புதிய நகைகளை வாங்கிச்சென்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் கொண்டமாபுரம் தெருவில் விமல்சந்த் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.

கடந்த 30ம் தேதி இவரது கடைக்கு வந்த 2 வடமாநில பெண்கள், 8 கிராம் பழைய நகைகளை கொடுத்து, புதிய நகைகளை வாங்கிச் சென்றனர்.

ஜூலை 1ம் தேதி மீண்டும் வேறொரு பெண் அதே கடைக்கு சென்று, 14 கிராம் பழைய நகைகளை கொடுத்து, புதிய நகை வாங்கியுள்ளார்.

அந்த நகைகளை உருக்கிப் பார்த்தபோது, போலி நகைகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, விமல்சந்த் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து லாரி மூலம் உத்தரப் பிரதேசம் தப்ப முயன்ற 2 பெண்கள் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.

விசாரணையில், நகைக்கடை மோசடியில் ஈடுபட்டது அவர்கள்தான் என கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட பரமேசன், அவரது மனைவி மானசி, ரவிகுப்தா, அவரது மனைவி சோனிகுப்தா ஆகிய நால்வரும், கடந்த மாதம் தமிழ்நாடு வந்தது தெரியவந்தது.

Exit mobile version