பொங்கல் விடுமுறைக்காக சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் 5 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு ஜனவரி 11 முதல் இன்று வரை 14 ஆயிரத்து 263 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் உட்பட 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக சென்னையில் இருந்து கடந்த மூன்று நாட்களில் 5 லட்சம் பேர், அரசு பேருந்துகளில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். டிக்கெட் விற்பனை மூலம் 8 கோடியே 26 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.