ராஞ்சி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 497 ரன்களுக்கு இன்னிங்சை முடித்துக் கொண்டது. தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.
இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில், முதலில் பேட் செய்து வரும் இந்தியா, முதல் நாளில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் ஷர்மா 117 ரன்களுடனும், ரஹானே 83 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில், 2 ஆம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், ரஹானே மேற்கொண்டு 17 ரன்கள் சேர்த்து தனது 11 வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். ரஹானே 3 ஆண்டுகளுக்கு பிறகு சதம் அடித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு முனையில் நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா இரட்டை சதம் விளாசினார். 250 பந்துகளில் சிக்சர் அடித்து தனது முதலாவது இரட்டை சதத்தையும் பூர்த்தி செய்தார். தொடர்ந்து 2 சிக்சர்களை அடித்து அதிரடி காட்டிய ரோஹித் ஷர்மா 255 பந்துகளில் 28 பவுண்டரி 6 சிக்சருடன் 212 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் எடுத்திருந்தபோது இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தது. ஷாபாஸ் நதீம் ஒரு ரன்னுடனும், முகமது ஷமி 10 ரன்களுடனும் களத்தில் நின்றனர். அதன் பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் டீன் எல்கர் ரன் எடுக்காமலும், குயிண்டன் டி காக் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 2 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மையால் இரண்டாம் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.