ராஞ்சியில் நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் 3வது போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச், உஸ்மான் குவாஜா ஆகியோர் அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டிற்கு 193 ரன்கள் சேர்த்தனர். உஸ்மான் குவாஜா சிறப்பாக விளையாடி சர்வதேச அரங்கில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
இதனையடுத்து இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய அணி 314 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 314 ரன்கள் எடுத்தால் வெற்றி எனக் களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 281 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி சிறப்பாக ஆடி 123 ரன்களுக்கு அவுட் ஆனார். இதனையடுத்து இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது. 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.