மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான மணிமுத்தாறு அணை, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவித்துள்ளனர். இந்தநிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் மாஞ்சோலை, காக்காச்சி, உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு செல்லும் பயணிகள் மணிமுத்தாறு அணைப்பகுதியில் அருவியின் அழகை கண்டு செல்கின்றனர். மணிமுத்தாறு அணையின் நீர் மட்டமும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.