இந்தியா மேற்கிந்திய தீவுகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இன்று நடைபெற உள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது போட்டி மழையால் ரத்தான நிலையில் 2 வது போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 1 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இன்று நடைபெறுகிறது. இந்தியா அணியை பொறுத்த வரை கோலி, ரோஹித் ஷர்மா, ஆகியோர் பேட்டிங்கிலும், புவனேஷ் குமார், குல்தீப் ஆகியோர் பந்து வீச்சிலும் அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இந்த சுற்றுப் பயணத்தில் 20 ஓவர் போட்டிகளையும் சேர்ந்து 4 போட்டிகளில் ஆடி மொத்தம் 29 ரன்களே குவித்து கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார். இதனால் கட்டாயம் தன்னை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுத்த வரை பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், பேட்டிங்கில் தடுமாறி வருகிறது. இதனால், இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணியும் சமன் செய்ய மேற்கிந்திய தீவுகள் அணியும் தீவிரம் காட்டி வருகின்றன.