மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளவை குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. முந்தைய ஆட்சியாளர்களின் உழைப்புக்கு பாஜக பெருமை தெடி கொள்வதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. நாட்டில் 21 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளதாகவும் அதில்,14 மருத்துவமனை பாஜக ஆட்சியில் கட்டப்பட்டதாக பியூஷ் பட்ஜெட்டில் குறிப்பிட்ட நிலையில், செயல்படும் நிலையில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே நாட்டில் உள்ளதாகவும் அவை அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டவை என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.
கடந்த 1947ம் ஆண்டு முதல் 2014 வரை 97 சதவிகித கிராமங்கள் மின்சார வசதி பெற்றுள்ளதாகவும் மீதமுள்ள 3 சதவிகித கிராமங்கள் மட்டுமே பாஜக ஆட்சியில் மின்சார வசதி பெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஒரு கோடியே 53 லட்சம் வீடுகள் பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டிருப்பதாக பியூஷ் கோயல் மக்களவையில் கூறிய நிலையில், 2018அம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ராஜிவ் காந்தி ஆவாஸ் யோஜனா உட்பட பல்வேறு திட்டங்களையும் சேர்த்து 36 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதேபோல், 143 கோடி எல்.இ.டி. விளக்குகள் வினியோகிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாயை சேமிக்க முடியும் எனவும் பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போதுவரை 32 கோடியே 30 லட்சம் எல்.இ.டி. விளக்குகள் மட்டுமே வினியோகிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
Discussion about this post