கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் இருந்து, 38 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அப்பர்பவானி, அவலாஞ்சி, குந்தா மற்றும் கேரள பகுதிகளான அட்டப்பாடி, முக்காலி, சோலையூர் உள்ளிட்ட பகுதிகள் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பில்லூர் அணைக்கு வரும் நீர் வரத்து விநாடிக்கு 38 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து பில்லூர் அணையின் நான்கு மதகுகள் வழியே 38 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனையடுத்து கரையோரங்களில் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற இரவு முதல் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.