நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சிலின் 36 வது கூட்டம், வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. ஜூலை 25 ஆம் தேதியன்று ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவை விவாதத்தில் பங்கேற்பதற்காக சென்று விட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச்செயலகத்தில் இருந்தவாரு கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில், மின் வாகனங்கள் மீதான ஜி.எஸ்.டி விகிதத்தை 12% முதல் 5% ஆகவும், ஈ.வி. சார்ஜர்கள் மீதான கட்டணத்தை 18% முதல் 5% ஆகவும் குறைக்க ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், மின்சார பேருந்துகளை வாடகைக்கு எடுக்க வாங்கப்படும் ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.