சென்னை உட்பட 13 கடலோர மாவட்டங்களில் சாகர் காவஜ் என்ற கடலோர காவல்படையின் 36 மணி நேர ஒத்திகை சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டதாக கடலோர காவல்படை கூடுதல் இயக்குநர் வன்னிய பெருமாள் தெரிவித்துள்ளார். கடலோர பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பது குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கடலோர காவல்படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 18 ஆம் தேதி காலை தொடங்கிய இந்த கடற்பயிற்சி 19 ஆம் தேதி மாலை வரை 36 மணிநேரம் நடைபெற்றது.
கடல் கவசம் எனப் பொருள்படும் சாகர் காவஜ் என்ற ஒத்திகை நிகழ்ச்சியில், தீவிரவாதிகள் வேடமணிந்த காவலர்கள் கடல் வழியாக ஊடுருவது போலவும், பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து பிடிப்பது மற்றும் கப்பல் தகர்ப்பு, ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு ஆகியவை இந்த ஒத்திகையின் முக்கிய அம்சமாக இருந்தது.
கடல்வழியாக நடைபெறக்கூடிய போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களை தடுப்பது குறித்தும் அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஒத்திகை நடைபெற்றது. இந்த முறை நடந்த ஒத்திகை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றதாகவும், கடற்படை அதிகாரிகள் ஆர்வத்துடன் பங்கேற்றதாகவும் கடலோர காவல்படை கூடுதல் இயக்குநர் வன்னிய பெருமாள் தெரிவித்துள்ளார்.
கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காவல்துறை, கடலோர காவல் படை, கடற்படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை அனைத்து கடலோர மாவட்டங்களிலும் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்துவது குறிப்பிடத்தக்கது.