பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் திமுக அரசு கொள்ளையடித்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கமிஷன் அதிகமாக கிடைப்பதாலேயே வடமாநிலங்களில் இருந்து பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழுமையான பொருட்கள் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
திருவண்ணாமலையில், இரண்டரை டன் வெல்லம் உண்பதற்கு உகந்ததல்ல என அதனை ஆட்சியர் நிறுத்திவைத்திருப்பதையும், அரசு வழங்கும் குறைவான பொருட்களால் தாங்கள் பாதிக்கப்படுவதாக நியாயவிலைக் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதை எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என திமுக அரசு கூறி வரும் நிலையில், பொங்கல் தொகுப்புக்காக வழங்கப்படும் பொருட்களில் இந்தியில் எழுதப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பால் திமுக அரசு கொள்ளையடித்ததுதான் மிச்சம் எனவும், தமிழ்நாட்டில் திறக்கப்படவுள்ள 11 மருத்துவக்கல்லூரிகளும் அதிமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கொரோனா தடுப்புப் பணிகளை திமுக அரசு திறமையாக கையாளவில்லை,டம்மி அரசாக செயல்பட்டுவரும் திமுக அரசு, ஒரு குழு அரசாங்கம் என என எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டினார்.
அதிக கமிஷன் கிடைப்பதாலேயே, பிற மாநிலங்களில் இருந்து பொருட்களை வாங்கி விநியோகம் செய்யப்படுவதாகவும், வடகிழக்குப் பருவமழையின்போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.