திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்களை, பேரூராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்வதில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சி நிர்வாகத்தினர் முனைப்புக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே, ‘சங்கர் பிளாஸ்டிக்ஸ்’ என்ற வடமாநில வியாபாரிக்கு சொந்தமான குடோனில், பேரூராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது குடோன் முழுவதும், அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பை, தட்டு உள்ளிட்ட பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது கண்டறியப்பட்டது. சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 டன் எடையுள்ள அந்த பொருட்களை, பேரூராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்து, 2 வாகனங்களில் எடுத்து சென்றனர்.
இதையடுத்து, பிளாஸ்டிக் மொத்த வியாபாரம் செய்து வந்த, ராஜஸ்தானைச் சேர்ந்த சங்கர்குமார் என்பவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த அதிகாரிகள், அவரது குடோனுக்கு ‘சீல்’ வைத்தனர்.
Discussion about this post