மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்கள் இன்று பதவியேற்கின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சராக கமல்நாத், ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சராக பூபேஷ் பகேல் ஆகியோர் காங்கிரஸ் கட்சியால் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதலமைச்சராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், மூன்று மாநில முதலமைச்சர்களும் இன்று பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆல்பர்ட் மண்டபத்தில் காலை 10 மணியளவில் அசோக் கெலாட் பதவியேற்கிறார்.
இதேபோல், போபாலில் பகல் 1.30 மணியளவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் பதவியேற்க உள்ளார். மாலை 5 மணிக்கு ராய்ப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பகேல் பதவியேற்கிறார். இந்த 3 முதலமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.