பாகிஸ்தானில் இந்திய விமானங்கள் பயணம் செய்யும் 3 வழிகள் மூடல்

பாகிஸ்தான் வான்வழியாக இந்திய விமானங்கள் பயணம் செய்யும் 9 வழித்தடங்களில் 3 வழியை பாகிஸ்தான் அரசு மூடியுள்ளது.

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியாக செல்லும் முக்கிய வழித்தடத்தை தவிர்த்து 3 பாதைகளையும் மூடுவதாக அந்நாடு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 5-ம் தேதி வரை இந்த தடை விதிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் வான்வழியில் மூன்று வழித்தடங்களும் இந்திய விமானங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் பாகிஸ்தான் செல்லும் விமானங்கள் 9 வழித்தடங்களில் 3 வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக ஐரோப்பா செல்லும் இந்திய விமானங்கள் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏர்-இந்தியா உட்பட இந்திய விமான நிறுவனங்களுக்கு கூடுதல் எரிபொருள் செலவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனினும் முக்கிய வழித்தடம் மூடப்படாததால் அந்த வழியாக விமானத்தை இயக்கலாம் என்பதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என ஏர் இந்தியா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் படையினர் சென்ற வாகனம் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் பகுதியில் உள்ள
பாலகோட் பகுதியில் செயல்பட்டுவரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை உதவியுடன் தாக்குதல் நடத்தி தரைமட்டமாக்கினர்.

இந்த நிகழ்வை அடுத்து பாகிஸ்தான் வான்வழிப் பகுதி பிப்ரவரி மாதம் 26ம் தேதி மூடப்பட்டது. இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானமும், அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களும் நீண்ட தூரம் சுற்றி
பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு அதிக எரிபொருள் செலவு ஏற்படுவதோடு, பயண நேரமும் அதிகரித்தது. இதனால்,ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு மட்டும் இதுவரை ரூ.431 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது.

கடந்த மாதம் 16-ம் தேதி தான் இந்த தடையை பாகிஸ்தான் விலக்கிக் கொண்டது. இந்தியாவில் இருந்தும் இயக்கப்படும் பயணிகள் விமானத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. பல மாதங்களுக்கு பிறகு நிலைமை சீரானது.

இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நடவடிக்கையால் மீண்டும் இந்தியா பாகிஸ்தான் உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version