கேரளாவில் கொரோனா வைரஸால் 3 பேர் பாதிப்பு -முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரளாவில் கொரோனா வைரஸால் 3 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து,  மாநில பேரிடராக முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

சீனா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அங்குள்ள உகான் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் வரும் கேரள மாணவி ஒருவரையும் இந்த வைரஸ் தாக்கியது. சீனாவில் இருந்து நாடு திரும்பிய அவர் திருச்சூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதேபோன்று உகானில் இருந்து கடந்த 24ம் தேதி திரும்பிய மற்றொரு மாணவருக்கும் வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. ஆலப்புழா அரசு பொது மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கேரளாவில் 3வது நபருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. காசர்கோடு பகுதியை சேர்ந்த அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.  இதையடுத்து, கேரளாவில் அடுத்தடுத்து 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, மாநில பேரிடராக முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Exit mobile version