நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக மேலும் 3 மாணவர்கள் கைது

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக, சென்னையில் மேலும் 3 மாணவர்களை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக ஏற்கெனவே உதித் சூர்யா என்ற மாணவன் பெற்றோருடன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 மாணவர்கள் சிக்கி உள்ளனர். பிரபல தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் பிரவீன், ராகுல் என்ற இரண்டு மாணவர்கள் மற்றும் அபிராமி என்ற மாணவி கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் லக்னோ மற்றும் டெல்லியில் நீட் தேர்வு எழுதிய இவர்கள் ஆள்மாறாட்டம் செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆள்மாறாட்ட பின்னணியில் யாருக்கெல்லாம் தொடர்பு, இடைத்தரகர்களுக்கு எத்தனை லட்சம் கைமாறியது என்பது குறித்து சிபிசிஐடி காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக, சென்னையில் மேலும் 3 மாணவர்கள் கைதாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆள்மாறாட்ட விவகாரத்தில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஜான் ஜோசப் என்பவரது நீட் பயிற்சி மையத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நீட் ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யாவின் தந்தை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கேரளாவில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சோதனை நடைபெற்றது.

Exit mobile version