குரூப் – 2ஏ தேர்வு முறைகேட்டில் மேலும் 3 பேர் கைது

குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 3 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

2017 ல் நடந்த குரூப் – 2 ஏ தேர்வில், ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 பேர் முறைகேடு செய்து, அதிக மதிப்பெண் எடுத்தது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி கொடுத்த புகாரின் பேரில், சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை குரூப் – 2 ஏ தேர்வு முறைகேட்டில் 2 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சென்னை, திருவிக நகரைச் சேர்ந்த விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில்,  ரமேஷ் என்பவர் மூலம் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரிடம் 9 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து குரூப்-2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றது தெரியவந்துள்ளது. இதேபோல் தூத்துக்குடியைச் சேர்ந்த சுதா, குற்றவாளி ஜெயக்குமாரிடம் 8 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுதாதேவி 7 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து குரூப் 2ஏ தேர்வில் வெற்றி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சுதாதேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 2019ல் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் இடைத்தரகராக செயல்பட்டு 5 பேரிடம் 38 லட்சம் ரூபாய் பெற்று, ஜெயக்குமாருடன் கூட்டுச்சதியில் ஈடுபட்டதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி ஜெயக்குமாரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version