சென்னை சைதாப்பேட்டையில் மலேசியாவை சேர்ந்த நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடித்த 4 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.
மலேசியாவை சேர்ந்த லஷ்மணன் என்பவர், சைதாப்பேட்டையில் உள்ள விடுதியில் தங்கி, தனது காலிற்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறார். மலேசியாவிலிருந்து அடிக்கடி சென்னை வரும் அவர், தங்க நகைகளை அணிந்து வந்து விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டி வந்துள்ளார். இதனை நோட்டமிட்ட நகை விற்பனை செய்யும் பிரோக்கர் ஆறுமுகம், இதுகுறித்து தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கடந்த 24ம் தேதி மலேசியாவில் இருந்து லஷ்மணன் தனது மகனை வரவழைத்துள்ளார். அப்போது இதனை நோட்டமிட்ட ஆறுமுகத்தின் கூட்டாளிகள், நந்தனம் தேவர்சிலை அருகே கத்தியை காட்டி மிரட்டி 30 சவரன் நகை மற்றும் பையில் இருந்த பாஸ்போர்ட் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து லஷ்மணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளை வைத்து ஆறுமுகம் மற்றும் அவரது கூட்டாளிகளான புவனேஷ், ஜெயக்குமார், ஆறுமுகம் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர்.